கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 968 பேர் பட்டம் பெற்றனர்.

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மும்பையில் உள்ள ஹோமி பாபா தேசிய நிறுவகத்தின் துணைவேந்தர் காமாட்சி முடாளி பங்கேற்று பட்டமளித்து பேசுகையில்: இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, பல துறைகளில் அதன் பயன்பாடு அதிகரித்து வருவதால் திறமையான மனிதவளத்துடன் உலகளாவிய மையமாக உருவெடுத்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, திறமையான நிபுணர்களுக்கான தேவை உயர்ந்து வருவதுடன், ஸ்கில் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் இதற்கு ஆதரவாக உள்ளன.

மாணவர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும். இலட்சியத்துடன் கூடிய உயர்வான நோக்கங்களை கடைப்பிடித்து, புதுமை, தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் தேசிய சவால்களை எதிர்கொள்ளும் பணிகளில் ஈடுபட வேண்டும் என பேசினார்.

எட்டு துறைகளிலிருந்து 935 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், நான்கு துறைகளிலிருந்து 33 மாணவர்களுக்கு முதுநிலை பட்டமும் இவ்விழாவில் வழங்கப்பட்டது. கல்லூரி அளவில் முதுநிலை துறைகளில் முதலிடம் பிடித்த கட்டமைப்புப் பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவி ஷானியா மற்றும் இளநிலை துறைகளில் முதலிடம் பிடித்த வேதிப் பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவி உமாமகேஸ்வரி ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு துறையிலும் தரவரிசையில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரியின் சார்பில் பாராட்டுப் பத்திரமும், பதக்கமும் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரியின் முதல்வர் தேவி பிரியா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள்  பங்கேற்றனர்.