காற்று மாசுபாடு என்பது இந்தியா எதிர்நோக்கும் மிகப் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக மாறியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச மருத்துவ இதழ் தி லான்செட் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் மட்டும் கடந்த 2022 ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டின் தாக்கத்தால் சுமார் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, அதே ஆண்டில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு தசாப்தத்தில் (2010–2022) காற்று மாசுபாட்டால் உயிரிழப்புகள் 38% வரை அதிகரித்துள்ளன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக புதை எரிபொருள்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அனல்மின் நிலையங்களில் நிலக்கரி எரிப்பால் மட்டும் சுமார் 4 லட்சம் பேர், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்களால் 2.7 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாசுபாட்டை குறைப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், பல முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. டெல்லியில் செயற்கை மழை மூலம் காற்று தரத்தை மேம்படுத்தும் முயற்சி சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. செயற்கை மழை ஏற்பட குறைந்தது 50% ஈரத்தன்மை தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 128 நிபுணர்கள் மற்றும் 71 கல்வி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட இந்த விரிவான ஆய்வில், காற்று மாசுபாடு இந்தியாவின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் மட்டும் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால், நாட்டிற்கு சுமார் 339 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 9.5% ஆகும்.
மேலும், கடந்த ஆண்டில் நாடு முழுவதும் வெப்ப அலைகள் தீவிரமாக இருந்ததால், ஒவ்வொரு இந்தியரும் சராசரியாக 20 நாட்கள் வரை கடுமையான வெப்ப அலைகளை அனுபவித்துள்ளனர். இதனால் 247 பில்லியன் மனித உழைப்பு நேரம் வீணாகி விட்டது எனவும் அறிக்கை கூறுகிறது.
