கிராமங்கள்தோறும் சப்த மாதர்களுக்கு எனத் தனிச்சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். காரணம், சப்தமாதர்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையான வரங்களை அருள்பவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில், வாராஹி அம்மன் சப்தமாதர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர்.

அரக்க குலத்தைச் சேர்ந்த கொடிய அசுரன் விசுக்ரனை அளிப்பதற்காக அவதாரமெடுத்த  வாராஹி அம்மன், வாராஹப் பெருமாளின் மறு உருவமாக காட்சியளிக்கிறாள்.

பண்டாசுரன் அசுரனின் தோளிலிருந்து விசுகரன் எனும் அரக்கன் தோன்றினான். இவர் கடும் தவம் இருந்து மிகப்பெரிய வரம் ஒன்றை இறைவனிடம் கேட்டார். அதாவது, தனக்கு மரணம் ஏற்படும் ஆயினும், அது தாயின் வயிற்றிலிருந்து பிறக்காத பெண்ணாகவும், அந்தப் பெண் பன்றி முகத்தை உடையவளாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டார். இறைவனும் அவரின் கடும் தவத்தை ஏற்று வரம் அளித்தார்.

இதையடுத்து, எந்த நிலையிலும் தனக்கு இறப்பே கிடையாது என்ற கர்வத்தில் தேவர்களுக்கு அதிகப்படியான தொல்லைகளைக் கொடுத்து வந்தான் விசுகரன். அப்போது தேவர்கள் விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என அனைத்து உலகிலும் அசுரன் வதம் செய்து வருகின்றான். இவற்றை எங்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை என தேவி லலிதா திரிபுரசுந்தரியிடம் கோரிக்கை வைத்தனர்.

பின்னர், தேவர்களும் யாகம் வளர்த்து தங்கள் கை, கால்களை வெட்டி யாகத்தில் போட்டனர். அவர்களின் உன்னதமான பிரார்த்தனையைக் கண்டு அன்னை லலிதாம்பிகை ஒரு வாக்களித்தார். உங்களைக் காப்பதற்காக நான் ஒரு பெண்ணை படைக்கிறேன். அந்த பெண், தாயின் கருவறையிலிருந்து பிறந்திருக்க மாட்டாள், பன்றி முகத்துடன் வருவாள் என அன்னை கூறினாள்.  அதேபோல், அந்த யாகத்தில் இருந்து தோன்றிய வாராஹி அம்மன், அசுரன் விசுகரனை அழித்து, தேவர்களை பாதுகாத்து நல்வாழ்வை அளித்தாள்.

எனவே, அன்னை பராசக்தியின் போர் படைத்தளபதியாக வாராஹி உள்ளதால், வாராஹியை வழிபடுபவர்களுக்கு மூன்று உலகங்களிலும் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்பது ஆன்றோரின் வாக்காக அமைகிறது.