கோவை நகர வளர்ச்சிக்கு முக்கியமான உள்ளூர் திட்டப் பகுதிக்கான இரண்டாவது முழுமையான மாஸ்டர் பிளானை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
1994ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதல் மாஸ்டர் பிளானின் அடிப்படையில் 1287 சதுர கிலோமீட்டராக இருந்த திட்டப்பகுதி, இப்போது மேம்படுத்தப்பட்டு 1531.57 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் கோவை மாநகராட்சி, மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலூர், காரமடை நகராட்சிகள், 21 பேரூராட்சிகள் மற்றும் 66 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கப்படுகின்றன.
இந்த புதிய மாஸ்டர் பிளான், 2041ம் ஆண்டை இலக்காகக் கொண்டு, நகரத் திட்டமிடல் வல்லுநர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட துறைகள் இணைந்து இந்த திட்டத்தில் பணியாற்றியுள்ளன.
புதிய திட்டத்தின் முக்கிய அம்சங்களில், மண்டலச் சாலைகள் மற்றும் இணைப்புகளை மேம்படுத்தல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், வீட்டு வசதிகளை மேம்படுத்தல், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது ஆகியவை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.
