– சிந்தனை கவிஞர் கவிதாசன்.

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், கோயம்புத்தூர் கொடீசியா புத்தகக் கண்காட்சி-2024- நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவ மாணவியரின் ‘பெருந்திரள் புத்தக வாசிப்பு’  நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

பள்ளி மைதானப்  பார்வையாளர் அரங்கில்  நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 850 மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு புத்தகங்களை வாசித்தனர்.

சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் கொடீசியா புத்தகக் கண்காட்சியின் துணைத் தலைவர் இராஜேஸ் கலந்து கொண்டார். பள்ளி நூலகத்தினைச் சிறப்பாகப் பயன்படுத்தி நூல்களைத் தொடர்ந்து படித்துவரும் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அவர் தனது சிறப்புரையில், ‘புத்தக வாசிப்பின் சிறப்பினை எல்லோரும் அறிந்துகொள்கின்ற வகையில் மாணவ மாணவியர் இங்கு ஒன்றாகக் கூடி ‘பெருந்திரள் புத்தக வாசிப்பு’ நிகழ்வில் அமர்ந்து வாசிப்பது சிறப்பிற்குரியது.

மாணவ மாணவியர் அனைவரும் மிகச்சிறந்த படைப்பாளிகளாகவும், புதியனவற்றைக் கண்டுபிடிக்கின்ற திறம்பெற்றவர்களாகவும் உருவாக வேண்டும்’ என்று பேசினார்.

பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தனது தலைமை உரையில், ‘மேனாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், ‘புத்தகம் நல்ல நண்பருக்குச் சமமானது, நல்ல நண்பர் ஒரு நூலகத்திற்குச் சமமானவர்’ என்பார். படிப்பது ஒரு நல்ல பழக்கம். தேர்விற்காகக் கற்பது, வேலைக்காகக் கற்பது, வாழ்க்கைக்காகக் கற்பது என மூன்று விதமான கல்வி உண்டு. எந்த நூலைப் படித்தாலும், அந்த நூலிலிருந்து ஒரு கருத்தையாவது நம் மனத்தில் நிறுத்தி, அதனைச் செயல்படுத்திக்காட்டும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் உங்களுக்கு பாடங்களைச் சொல்லிக்கொடுப்பதோடு, நூல்களைப் படிக்கின்ற முறைகளையும் கற்றுத்தருகிறார்கள். தொடர்ந்து அனைவரும் நூல்களைப் படித்துப் பயன் பெற வேண்டும்’ என்று பேசினார்.

இதில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.