உறுதியான முடிவை பொருத்தே வெற்றி

  • பாலகிருஷ்ணன், கோவை மாநகர காவல் ஆணையர்

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கான கிளப் திறப்பு விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர் கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ். அதிகாரி பிரசாந்தை பாராட்டி விருது வழங்கி, பின்னர் கிளப்பைத் திறந்து வைத்து பேசுகையில்,  “உறுதி, விடாமுயற்சி, கடும் உழைப்பு மூன்றும் இருந்தால் சிவில் சர்வீஸ் துறையில் வெற்றி நிச்சயம். அது மட்டுமல்ல எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் வெற்றி பெற முடியும். ஒரு மனிதனுக்கு, முடிவு எடுக்கும் திறனை ஆண்டவன் கொடுத்துள்ளார். அந்த முடிவை எடுப்பது உங்களது கையில் உள்ளது. இதற்கு இங்கு தொடங்கப்படுள்ள கிளப், உங்களுக்கு சரியான பாதையை வழங்கும். இதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். சிவில் சர்வீஸ் துறையில் மட்டும்தான் பொதுமக்களை நேரடியாக சந்தித்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மற்ற துறைகளில் அது மிகவும் குறைவு. நடந்ததை நினைத்து வருத்தமடையாமல், தற்போது அதனை எவ்வாறு சிறப்பாக செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

“காவல் ஆணையர் சேவை, கோவை மக்களுக்கு தேவை”

  • சி.ஏ.வாசுகி, செயலாளர், கொங்குநாடு கல்லூரி

கல்லூரி செயலாளர் மற்றும் இயக்குநருமான சி.ஏ.வாசுகி தலைமை வகித்து பேசுகையில், ‘சமூகத்திற்கு சேவை செய்ய அரசு வேலை ஒரு கருவியாகும். எனவே இளைஞர்கள் விடாமுயற்சியோடு அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கோவை மக்களைக் காக்கும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், நகரத்தின் அனைத்து பிரச்னைகளிலும் மக்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்கி வருகிறார். இவரின் நேர்மையான தன்னலமற்ற சேவை, நம் கோவை மக்களுக்கு முக்கியத் தேவையாக இருக்கிறது’ என்றார்.

வாழ்வில் ஜெயிக்க போராட கற்றுக்கொள்ளுங்கள்

–      சிறப்பு விருந்தினர் பிரசாந்த், ஐ.பி.எஸ்.

இதில் ஐ.பி.எஸ். அதிகாரி பிரசாந்த் பேசுகையில், “மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தேன். பின், சிவில் சர்வீஸ் தேர்வில் முழு முயற்சியுடன் கவனம் செலுத்தி இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளேன். வாழ்க்கையில் படிப்பு ஒன்று மட்டுமே ஒருவரைத் தலைநிமிர வைக்கும். மாணவர்கள் எல்லா நேரத்திலும் தங்களது குறிக்கோளை மனதில் உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

எந்த சூழலிலும், எதற்காகவும் உங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்கக் கூடாது. போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால், போராட கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.

கல்லூரி முதல்வர் சங்கீதா, அறம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் லதா சுந்தரம், ஒருங்கிணைப்பாளர்கள் சுஜாதா, சுமதி, சரவணன் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.