வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரைக் கொண்ட ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கிய நிலையில் அது சாத்தியமா என்ற கேள்வி, அரசியல் அரங்கில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

அதிமுக பொதுச்செயலர் ஜெ.ஜெயலலிதா மறைந்து 7 ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும், விடாது கருப்பு என்பதுபோல அதிமுகவுக்குள் தொடர்ந்து புகைச்சல் இருந்துகொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் தற்காலிக பொதுச் செயலராக வி.கே.சசிகலா பதவியேற்றது, முதல்வர் பதவி பறிக்கப்பட்டதால் ஓபிஎஸ் தருமயுத்தம் நடத்தியது, புதிய முதல்வராக இபிஎஸ் பதவியேற்றது, சசிகலா சிறைக்குச் சென்றதும் டி.டி.வி.தினகரனை ஓரங்கட்டிவிட்டு அப்போதைய முதல்வர் இபிஎஸ்-ஓபிஎஸ் கைகோர்த்து கட்சிக்கு இரட்டைத் தலைமையானது, இறுதியாக ஓபிஎஸ் நீக்கப்பட்டு இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஆனது என அதிமுகவுக்குள் தொடர்ந்து அரசியல் சதுரங்கம் நடந்துகொண்டே இருக்கிறது.

அதிமுகவுக்குள் தொடர்ந்து அரசியல் சதுரங்கம் நடந்துகொண்டே இருக்கிறது.

ஒற்றைத் தலைமை வந்தால் எல்லா பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நம்பியிருந்த நிலையில், 2024 மக்களைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்குள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 13 மக்களவைத் தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது, 7 தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது, குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி ஆகிய தென்மாவட்ட தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது, கன்னியாகுமரி, புதுச்சேரி என இரு மக்களவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியைவிட குறைவாக 4-வது இடத்துக்குச் சென்றது ஆகியவற்றை அதிமுக அடிமட்ட தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

தேமுதிக கூட்டணி இல்லையென்றால் வடசென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழந்திருக்கக்கூடும். இதை எல்லாம் கணக்குப் போட்டுத்தான் பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவுக்குள் சேர்க்க வேண்டும் என்ற குரல் மாநிலம் முழுவதும் தொண்டர்கள் மனதில் எழுந்துள்ளது. தொண்டர்களின் குரலை தலைமையிடம் பதிவு செய்தால் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்ற எண்ணத்தில்தான் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.தங்கமணி, கே.ஏ.அன்பழகன் ஆகியோர் அதிமுகப் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை அண்மையில் சந்தித்தனர். ஆனால் அவர், சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோரைத் தவிர்த்து யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம் என உறுதிபடக்கூறியது மூத்த நிர்வாகிகளிடம் மட்டுமல்ல, தொண்டர்களிடமும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இபிஎஸ் முடிவு சரியா, தவறா என ஆய்வு செய்தால் அவர் சார்ந்தும், கட்சியின் நலன் சார்ந்தும் சரியான முடிவுதான். அதிமுகவின் நிழல் அதிகார மையமாகவும், தற்காலிக பொதுச் செயலராகவும் சசிகலா இருந்தபோது அவருக்குக்கீழ் பணியாற்றிய இபிஎஸ், இப்போது அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச்செயலர் பதவியை வகித்து வருகிறார். அப்படியிருக்க இப்போது சசிகலாவுக்கு என்ன பொறுப்பு வழங்குவது, இபிஎஸ்-க்கு அடுத்து அவைத் தலைவர் அல்லது இணை, துணை பொதுச்செயலர் பதவியை ஏற்க சசிகலா மனது சம்மதிக்குமா அல்லது பொதுச்செயலர் பதவியை சசிகலாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு மீண்டும் கைட்டி நிற்க இபிஎஸ் மனது சம்மதிக்குமா, இவையெல்லாம் விடை கிடைக்காத கேள்விகள்.

அப்படியே விட்டுக்கொடுத்தால் மீண்டும் எடப்பாடி பேரவைத் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்றால் சசிகலா வீட்டு வாசலில் அல்லவா காத்திருக்க வேண்டும்?! கிளைச் செயலாளர் முதல் தமிழக முதல்வர், பொதுச்செயலர் பதவிகள் வரை படிப்படியாக வளர்ந்து வந்த இபிஎஸ், இதற்கு உண்டன்பட்டு எப்படி இறங்கி வருவார்?!

அதேபோல, முன்னாள் முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என உச்சபட்ச பதவிகளை இபிஎஸ்-ஓபிஎஸ் என இருவருமே சமமான பதவிகளை வகித்தவர்கள். ஓபிஎஸ் சேர்க்கப்பட்டால் மீண்டும் இரட்டைத் தலைமை கொண்டுவர வேண்டும், ஒற்றைத் தலைமையைப் பிடித்த இபிஎஸ், இரட்டை இலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை எப்படி மீண்டும் பகிர்ந்துகொள்ள சம்மதிப்பார், பொதுச்செயலராக ஜெயலலிதா, சசிகலா இருந்தபோது அவர்களுக்குத் தலைமை தளபதியாக இருந்து இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு கட்டளை பிறப்பித்தவர் டி.டி.வி.தினகரன். அவரைத் தனக்கு கட்டளையிடும் பொறுப்பில் மீண்டும் அமர்த்த இபிஎஸ்  எப்படி சம்மதிப்பார். அதேபோல்தான், தங்களுக்குக் கீழ் பணியாற்றிய இபிஎஸ்-ஐ சசிகலா, தினகரனும், தனக்கு நிகராகப் பணியாற்றிய இபிஎஸ்-ஐ ஓபிஎஸ்-ம் எப்படி ஏற்பார்கள்.

இனி ஒரே குடைக்குள் சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் வருவது என்பது சூரியனை மேற்கில் உதிக்க சொல்வதற்கு சமம். அரசியலில் ஒரு அதிகார மையத்தைப் பிடித்தவர்கள் எப்படி அதனை விட்டுகொடுப்பார்கள், ராஜதந்திரியான இபிஎஸ் தனது பிடியை எப்படி தளர்த்துவார் அல்லது விட்டுக்கொடுப்பார். மக்களவைத் தேர்தல் முடிவை ஆய்வு செய்தால் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் இல்லாதவரை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதிமுக மீண்டு எழுவது மிகுந்த சிரமம்தான். அதிமுக தலைமை, முதல்வர் வேட்பாளர் என இபிஎஸ் இருக்கும் வரை இந்தநிலையில் மாற்றம் வருவது கடினமான விஷயம்.

கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் அண்ணாமலை செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், இபிஎஸ்-ஐ தவிர்த்துவிட்டு வேறொருவரை முதல்வராக முன்னிறுத்தினால் கொங்கு மண்டலத்தில் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பது உறுதி. அதேபோல, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவை அதிதீவிரமாக ஆதரித்து வந்த ஹிந்துத்வ ஆதரவாளர்கள், பாஜக பக்கம் திரும்பியிருப்பதும் கொங்கு மண்டலம், சென்னை புற நகர் பகுதிகளில் தெளிவாகத் தெரிகிறது. தென்சென்னை, மத்திய சென்னை மக்களவை தொகுதிகளில் அதிமுக டெபாசிட் பறிபோனதே இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமைக்குக் கிடைத்திருக்கும் 23.4 சதவீத வாக்குகளை எப்படி அதிகரிப்பது, வலுவான கூட்டணி ஒன்றை எப்படி அமைப்பது என அதிமுக தலைமை நிர்வாகிகள் சிந்திக்க வேண்டுமேதவிர, சசிகலா, ஓபிஎஸ், தினகரனை மீண்டும் சேர்த்தால் கட்சிக்குள் கலகக் குரல்கள் தொடரும் என்பது மட்டுமல்ல, அதிமுக வாக்கு வங்கி மேலும் சேதாரமாகும்.

தமிழக அரசியலில் இனி, பாஜக, நாதக மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதுதான் கள நிலவரம். அதிமுக ஒற்றுமை என்ற புள்ளியில் இபிஎஸ்-ஐ குற்றஞ்சாட்டி டெல்டா, தென்மாவட்டங்களில் தனி சக்தியாக அல்லது கூட்டணி சக்தியாக வலம் வருவதுதான் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களின் அரசியல் வளர்ச்சிக்கும் லாபம். மாறாக அவர்கள் மூவரும், அதிமுகவில் இணைந்தாலும்கூட முக்குலத்தோர் வாக்கு வங்கி முழுமையாக அதிமுகவுக்கு வருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.