ஜி. குப்புசாமி நாயுடு மெமோரியல் மருத்துவமனையில் (ஜி.கே.என்.எம்), உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி.கே.என்.எம் புறநோயாளிகள் மருத்துவ மையத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.ராகவேந்திரா நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

இதில் சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று நிகழ்வில் கலந்து கொண்ட பி.வி.எம் குளோபல் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

சிறுநீரக நோயின் ஆரம்பகால அறிகுறிகளைக் கண்டறிதல், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் அவசியம், மேம்பட்ட சிகிச்சை முறைகள் பற்றிய புரிதல், சிறுநீரகக் கோளாறுகளைத் தடுக்க வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை குறித்து இளம் தலைமுறையினரிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

இதில் பெரியவர்களுக்கான சிறுநீரக நிபுணர்கள் டாக்டர் ராமச்சந்திரன் மற்றும் டாக்டர் ஜெயப்பிரகாஷ், குழந்தைகளுக்கான சிறுநீரக நிபுணர் டாக்டர்.அனுரேகா செல்வராஜ் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஞ்சுநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னணியில் இருக்கும் ஜி.கே.என்.எம் மருத்துவமனை, நவீன வசதிகளுடன் கூடிய 24 மணி நேர டயாலிசிஸ் பிரிவைக் கொண்டுள்ளது. இங்கு ஹீமோடயாலிசிஸ் முதல் பெரிட்டோனியல் டயாலிசிஸ் வரை உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் நிபுணத்துவ மருத்துவர்களால் வழங்கப்படுகின்றன.

சமூக ஆரோக்கியத்திற்கான ஒரு பகுதியாக, ஜி.கே.என்.எம் மருத்துவமனை பள்ளி ஆரோக்கிய கூட்டாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் ஆனது முதலுதவி பயிற்சி மற்றும் அவசர கால பராமரிப்பு, பள்ளி சுகாதார பரிசோதனைகள், சுகாதார விழிப்புணர்வு அமர்வுகள், உலக சுகாதார தினங்களில் மாணவர்களை ஈடுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.