தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை மனவலிமை கொண்டவர் என கூறவேண்டும் என எண்ணி நடிகர் ரஜினியை பற்றி பேசிய கருத்து கடும் கண்டனங்களை பெற்றுவருகிறது.
“தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு பிரபலமான அரசியல் தலைவராக வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டுமென ரஜினிகாந்த் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், இதே திமுக குடும்பம் ரஜினிக்கு பல மிரட்டல்களைக் கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இன்றைக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க சென்றுவிட்டார். இதை நான் அவர் மீது விமர்சனமாக சொல்லவில்லை. ஆனால், மிரட்டல்களைத் தாங்கும் மனவலிமை நம் தலைவரிடம் உள்ளது என்பதை நான் பதிவு செய்கிறேன்.” என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
இதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்; முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி; தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்; தமிழக பா.ஜ.க.முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரையுலகத்தினர், மூத்த பத்திரிகையாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தன்னை பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் ஆதவ் தெரிவித்திருந்தார் எனக்கூறி, “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று அழுத்தமாக கூறியிருந்தார். மேலும் ஆதவின் அவதூறுக் கருத்தைக் கண்டித்து, தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
விஜய்க்கு மேலும் சிக்கல்?
2025, 2026 ஆகிய ஆண்டுகள் விஜய்க்கு பெரும் சவாலான ஆண்டாகவே இருந்து வருகிறது. யாரும் எதிர்பாராத கரூர் சம்பவம், அது தொடர்பாக டெல்லியில் தொடரும் சி.பி.ஐ. விசாரணை; ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது தெரியா நிலை;மனைவி விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு பொதுவெளியில் கசிந்த சம்பவம் என கடந்த சில மாதங்களில் விஜய் எத்தனையோ சவால்களையும் வருத்தங்களையும் சுமந்து வருகிறார்.
ஏற்கனவே விஜய் ரசிகர்கள் – ரஜினி ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல் அதிகம் உள்ளது. இந்த நேரத்தில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து விஜய்க்கு மேலும் சவாலாக அமைந்துள்ளது. ஏனென்றால் அரசியல் ரீதியாக ரஜினியை ஆதவ் விமர்சித்துள்ளார். இது விஜய்க்கு தேர்தல் நேரத்தில் கடும் சவாலாக அமையும் என்பதை தான் மதுரையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் உணர்த்துகின்றன.

