தமிழக அரசியல் சூழலில் அதிமுக-பாஜக கூட்டணியைச் சுற்றி புதிய சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி ஒதுக்கீட்டில், சாதகமான தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என பாஜக தரப்பில் அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாகர்கோவில், மொடக்குறிச்சி, திருநெல்வேலி போன்ற முக்கிய தொகுதிகள் இம்முறை பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில், கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், இம்முறை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், தமிழக பாஜகவின் முக்கிய முகமாக விளங்கும் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக இருந்தார். கோவையில் குறைந்தது இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என பாஜக எதிர்பார்த்திருந்தாலும், இறுதியில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் அண்ணாமலை விரக்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தனக்கு ஏற்ற தொகுதி வழங்கப்படாததுடன், பாஜகவுக்கு சாதகமான பகுதிகள் பெரும்பாலும் ஒதுக்கப்படவில்லை என அவர் குற்றச்சாட்டு வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியை கட்சி தலைமையிடம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தான் தேர்தலில் போட்டியிட விருப்பவில்லை என்றும், கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, தோல்வியடைந்தாலும் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றது அரசியல் அரங்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பாஜக இங்கு அதிக எதிர்பார்ப்பு வைத்தது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தனது முடிவே இறுதியானது என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், பாஜக அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

கொங்கு மண்டலம் அதிமுகவின் வலுவான பகுதியாக உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இப்பகுதியில் அதிமுக அதிக இடங்களை வென்றது. 10 சட்டசபை தொகுதிகளில் 9ல் அதிமுகவினரும், கோவை தெற்கில் கூட்டணியில் இருந்த பாஜகவின் வானதி சீனிவாசனும் வெற்றி பெற்றார். எனவே, இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள, பாஜகவுக்கு கோவையில் ஒரு தொகுதி வழங்கப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் கடந்த மக்களவை தேர்தலில் கூட்டணி இல்லாமல் அதிமுக – பாஜக தனித்தனியாக போட்டியிட்டன.

அதில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 ஓட்டுகள் பெற்று வென்றார். அதிமுகவை பின்னுக்கு தள்ளி அண்ணாமலை 4,50,132 ஓட்டுகள் பெற்று, 2ம் இடம் பிடித்தார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் சென்றார்.

எனவே, கோவையில் அண்ணாமலைக்கு சீட் வழங்குவது எதிர்காலத்தில் அதிமுகவின் பலத்தை குறைக்கக்கூடும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்திருக்கலாம் என்றும், இதனால் தான் கோவையில்  பாஜக கோரிய இடங்களை ஒதுக்க மறுத்துவிட்டதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.