தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு

வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்கியது. நாளையுடன் நிறைவடைகிறது. இடையில் 4 நாட்கள் விடுமுறை என்பதால் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் கிடைத்தது. இதில் 3 நாட்கள் முடிவடைந்து விட்டன.

மார்ச் 30ம் தேதியான முதல் நாளில் 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2வது நாளான கடந்த 2ம் தேதி 788 மனுக்களும், 3ம் நாளான நேற்று 1,639 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வகையில் நேற்றுடன் மொத்தம் 3,000 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர்.

நாளை வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளாகும். காலை 11 மணியில் இருந்து 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்துவிட வேண்டும்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை, தான் போட்டியிடும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் பலரும் நாளை தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின், கோவை வடக்கு தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நாளை (ஏப்ரல் 6) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இதில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா கலந்து கொள்கிறார்.

முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இதில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலைக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, அவர் கோவையில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்பினார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தான், வேட்பாளர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாதது பெரும் விவாத பொருளாகியது.

இப்படி இருக்கும் சூழலில், வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அண்ணாமலையும் அதில் கலந்துகொள்ள உள்ளதாக வெளியான தகவல் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, தான் எந்தத் தொகுதியையும் கேட்கவில்லை என்றும், வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவேன் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.