கோவை பீளமேட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில் எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதில் நடந்த புகைப்பட கண்காட்சியை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்: இன்று இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். 1974ம் வருடம் ஜூன் 25 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. எமர்ஜென்சி காலத்தில் நாட்டின் ஜனநாயகம் செயல்படாமல் இருந்தது. 21 மாதம் நெருக்கடி நிலை இருந்தது.
காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட குடும்பத்திடம் எப்போதும் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக செயல்பட்டது. அதற்கு சரியான உதாரணம் திமுக – காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.
ஆனால் அவசர நிலை காலகட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் கொடுமைகளை அனுபவித்தார்கள். அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.
பாஜக அரசாங்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற அரசாக செயல்படுகிறது. ஸ்டாலின் நெருக்கடி நிலையில் பட்ட அனுபவங்களை மறந்துவிட்டார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இங்கு நெருக்கடி நிலை உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.
தமிழகத்தில் பல இடங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மாணவிகளுக்கு கழிப்பிடம் இல்லை. மத்திய அரசு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி அறிவு பெற வேண்டும் என விரும்புகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் கல்விக்கான அடிப்படை வசதியை அமைக்கவில்லை. இப்போது தான் வடமாநிலங்கள் உட்பட பல இடங்களில் அடிப்படை வசதி ஏற்பட்டு வருகிறது.
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். தமிழை அதிகமாக கற்றுக் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை திமுக அரசு ஏற்படுத்த வேண்டும். முருகன் மாநாட்டால் அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது. திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது எனப் பேசினார்.
