டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. எம்.சி.இ.டி தலைவர் மாணிக்கம் விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை இன்ஃபைனைட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் (மனிதவளம்) ஷோபா சுரேஷ் நிதின் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: கல்வி நிறுவனத்தில் பெற்ற மதிப்புகள், தொழில்நுட்ப திறன்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திலும் கொண்டுசெல்ல வேண்டும்.
தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், பிளாக்செயின், சைபர் பாதுகாப்பு, குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்கள் பல துறைகளை மாற்றிவருகிறது. எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க, வாழ்நாள் முழுவதும் கற்றல், தன்னிலைபற்று, தொடர்ந்த திறன்வளர்ச்சி ஆகியவற்றை அணுக வேண்டும்.
தொழில்நுட்பம் என்பது வெறும் இயந்திரங்களைப் பற்றியதல்ல, அது மக்களையும் பற்றியது. ஆர்வமாக, துணிச்சலாக இருங்கள். புதுமையின் மூலம் சமூகங்களை உயர்த்தவும், நீடித்த தாக்கத்தை உருவாக்கவும் முயலுங்கள் எனப் பேசினார்.
விழாவில் 716 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 11 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள், 14 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் செயலர் சுப்ரமணியன், எம்.சி.இ.டி தாளாளர் ஸ்ரீ ஹரிஹரசுதன், முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார், பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
