ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஹெல்த் பேசிக்ஸ் சார்பில் ஆரம்பக்கால மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையம் துவக்க விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக பத்ம ஸ்ரீ சங்கரா கண் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ரமணி பங்கேற்று மையத்தைத் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “ஒரு மனிதன் முழுமையாக வளர்ச்சி பெற ஆரோக்கியமான மனம், நல்ல கல்வி,  ஆரோக்கியமான உடல் இருக்க வேண்டும். வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளைக் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் வளரக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இம்மையம் தொடங்கப்பட்டது மிகவும் பாராட்டத்தக்கது. பெற்றோர்களும் இது குறித்த புரிதல்களை அறிந்து கொண்டு மனம் தளராமல் அதற்கு உண்டான பயிற்சி அளிக்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து, எஸ். என். ஆர். சன்ஸ் அறக்கட்டளை முதன்மை செயல் அதிகாரி சுவாதி ரோஹித் பேசுகையில், அறிவுசார் குறைபாடுகள் மற்றும் கற்றல் சிரமங்களைக் கொண்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய மையமாக இருக்கலாம், ஆனால் கோவையில் பல்வேறு இடங்களில் தொடங்குவதற்கு சிறந்த உதரணமாக இருக்கும்.

ஒரு முறை சங்கரா கண் மருத்துவமனை சென்ற போதுடாக்டர்.ரமணி தொடங்கிய கண் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கான மையம் என்னை ஈர்க்க செய்தது. அந்த வகையில், வளர்ச்சி குறைபாடுகள் உள்ள அனைத்து குழந்தைகளும் சமூகத்தில் சேர்ந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளியில் தொடங்கப்பட்டது.

இந்த மையம் ஒரு குழந்தையின் நடத்தையை மாற்றியமைத்து, அவர்களை தெளிவாக பேச செய்து, அவர்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், ஒரு குழந்தையின் தனிப்பட்ட மதிப்பீடு, ஒழுங்குமுறை, மற்றவர்களிடம் அணுகும் முறை, பேச்சு மற்றும் மொழி சிகிச்சை மற்றும் உள்ளடங்கிய விளையாட்டு மற்றும் அறிவுசார் திறன் பயிற்சியை வழங்குவதில் தனி கவனம் செலுத்துகிறது” என்றார்.

இதில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கோவை பிளே ஸ்கூல் உரிமையாளர்கள் சங்கம் தலைவர் கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.