ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கொண்ட பயணம் குறித்த “மண் காப்போம்: உலகை மாற்றியமைத்த 100 நாட்கள்” என்ற புத்தகம் வெளியாகி உள்ளது.
‘மண் காப்போம்’ இயக்கத்தின் பின்னணியில் உள்ள சொல்லப்படாத கதைகள், இதுவரை வெளிவராத புகைப்படங்கள் மற்றும் அந்தப் பயணத்தின் பிரம்மாண்டத்தை விளக்கும் வகையிலான புதிய புத்தகம் வெளியாகியுள்ளது. “மண் காப்போம்: உலகை மாற்றியமைத்த 100 நாட்கள்” (Save Soil: 100 Days That Moved The World) என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை, சத்குருவின் மகளும் பிரபல பரதநாட்டியக் கலைஞருமான ராதே ஜகி தொகுத்துள்ளார்.
இந்த புத்தகத் தொகுப்பானது, மண் வளத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சத்குரு மேற்கொண்ட 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தின் முக்கிய தருணங்களை விவரிக்கிறது. மேலும் 27 நாடுகளில் 100 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் பயணத்தில், திரைக்குப் பின்னால் உழைத்த தன்னார்வலர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாசகர்களுக்கு அந்தப் பயணத்தின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் இதுவரை வெளிவராத அரியப் புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பயணத்தின் போது 27 நாடுகளிலும் அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில், சத்குரு பங்கேற்று மண் வளம் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சிகளில் ராதே ஜகி தலைமையேற்று வழிநடத்திய
‘புராஜெக்ட் சமஸ்கிருதி’ குழுவினர் கலை நிகழ்ச்சிகள் மூலமாக மண் வளத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
இந்த புத்தகம் குறித்து ராதே ஜகி கூறுகையில், “இந்தப் பயணம் பெரும்பாலான மக்கள் பார்த்திராத எண்ணற்ற தருணங்களால் நிறைந்தது. கண்டங்கள் கடந்து பல தன்னார்வலர்கள் அசாதாரணமான அர்ப்பணிப்புடன் முன்வந்து, மண் வளப் பாதுகாப்பின் செய்தியை கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கத் திரைக்குப் பின்னால் உழைத்தனர். இந்த இயக்கத்தை உண்மையாக இயக்கியது அந்த மனிதர்களின் ஆற்றல் தான்
இதனை மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில், அவர்களின் குரல்களையும் அனுபவங்களையும் ஆவணப்படுத்துவது முக்கியம் என்று நான் கருதினேன். ‘மண் காப்போம்: உலகை மாற்றியமைத்த 100 நாட்கள்’ என்ற இந்தப் புத்தகம் அந்தத் தனித்துவமான கதைகளையும், நமது மண்ணின் எதிர்காலத்திற்காக மக்களை ஒன்றிணைத்த அந்த உணர்வையும் பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.
இந்தப் பயணத்தில் ஒரு பகுதியாக இருந்தது, சத்குருவின் அளப்பரிய அர்ப்பணிப்பை மிக அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பை அளித்தது. 100 நாட்களில் 27 நாடுகளைக் கடந்து பயணிப்பது உடல் ரீதியாக மிகுந்த சவாலானது. இருப்பினும், நாங்கள் சென்ற இடமெல்லாம் மண்ணைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்களின் அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் கண்டோம்.” எனக் கூறினார்.
“பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா” நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இப்புத்தகம், தற்போது அமேசான் தளத்தில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 29 முதல் பிளிப்கார்ட், ஈஷா லைஃப் மற்றும் முக்கிய புத்தகக் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும். சுமார் 464 பக்கங்கள் மற்றும் 6 அத்தியாயங்களைக் கொண்ட இந்தப் புத்தகம், சத்குரு தனது பயணத்தை துவங்கிய ஐரோப்பா முதல் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வந்தடைந்தது வரையிலான முழுப் பயணத்தையும் விவரிக்கிறது.
