மேற்கு புறவழி சாலை வழியே மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட அறிவொளி நகர் சந்திப்பு பகுதியில், 13.2.2026 அன்று நடைபெற்ற சாலை விபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் புறவழி சாலை அருகே இருக்கக்கூடிய குடியிருப்புகளை சேர்ந்த மக்களும் ஒன்றாக சேர்ந்து அங்கு விபத்து சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும், அறிவொளி நகர் – மேற்கு புறவழி சாலை இணையும் இடம் அருகே பாதுகாப்பாக வாகனங்கள் செல்ல அந்த சந்திப்பில் உயர்மட்ட பாலம் அல்லது சுரங்க பாதை போன்ற தீர்வு வழங்கப்படவேண்டும் எனவும் போராடினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. புறவழிச்சாலை திட்டம் முடிவடைந்து திறக்கப்பட்ட பின்னர், வாகனங்கள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்த துவங்கி உள்ளன. சுரங்க பாதை கட்டுவதற்கான முன்மொழிவு அதற்கான மதிப்பீடுடன் நெடுஞ்சாலை துறை மூலம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என கோவை கலெக்டர் புறவழிசாலையின் திறப்பு விழா அன்று தெரிவித்தார்.
பொதுமக்களின் கோரிக்கை
” 13.2.26 அன்று நடந்த அந்த சோக சம்பவத்திற்கு பின்னர் மேற்கு புறவழி சாலை – அறிவொளி நகர் பகுதி அருகே சாலை பாதுகாப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தற்போது இப்பகுதிகளில் வேகத்தடை, ரவுண்டானா, மையத்தடுப்பு, ட்ராபிக் சிக்னல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது,” என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறினார்.

“இங்குள்ள போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு மட்டும் அணைந்தும் எரிந்தும் வருகிறது. இது முற்றிலுமாக செயல்பட்டால் சாலை பாதுகாப்பு இன்னும் மேம்படும். இதை அதிகாரிகள் உடனே செய்துகொடுக்கவேண்டும். மேலும் சுரங்கப்பாதையை வேகமாக அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என கூறினார்.

