கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 33.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கிவைக்கப்பட்டன.
இப்பணிகளுக்கான பூமி பூஜை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
விளாங்குறிச்சி பகுதி மாநகராட்சி 22வது வார்டு அரசு பணியாளர்கள் நகரில் உள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடத்தில் நடைபாதை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ: 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின.
இதே வார்டில் வரக்கூடிய சேரன் மாநகர் 3வது பேருந்து நிலையம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டது. 7வது பேருந்துநிலையம் பகுதியில் இறகுபந்து மைதானம் கம்பிவேலி அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11.8 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இந்த 3 பணிகளுக்கும் இன்று பூமி பூஜை நடைபெற்றது. இதில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
