கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (13.01.2026 ) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி  தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,  “தமிழரின் பாரம்பரியத்தைப் பறைசாற்றுவது பொங்கல் விழா” எனக் கூறிப் பொங்கலின் இனிமை போல அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி நிறைய வாழ்த்துகளைத்  தெரிவித்தார்.

கே.பி.ஆர் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கீதா வாழ்த்துரை வழங்கினார்.

மாணவர்களும் பேராசிரியர்களும் இணைந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து தைத்திருநாள் வழிபாடு நடத்தினர். மேலும் மாணவர்களுக்குப், பொங்கலிடுதல், முளைப்பாரி,  கோலப்போட்டி,  நடனப்போட்டி, உரியடித்தல், கயிறு இழுத்தல் எனப்  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

பொங்கல் வழிபாட்டிற்குப்பின் தமிழரின் பாரம்பரியக்  கலைகளான வள்ளிக்குமமி, கம்பத்தாட்டம், காவடியாட்டம், சிலம்பம், பெருஞ்சலங்கையாட்டம் போன்ற நிகழ்த்துக்கலைகளும், கலைநிகழ்ச்சிகளும்  மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன.

உழவர்களின் உழுதொழிலுக்கு உதவும் காளைகள், ஆட்டுக்கிடா, குதிரை போன்றவை நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும், தொண்ணூறுகளில் விற்கப்பட்ட பல்வேறு மிட்டாய்களையும், பாரம்பரிய உணவுகளையும் மாணவர்களுக்கு நினைவுகூறும் வகையில் “அங்காடித்தெரு” என்னும் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டன.

கல்லூரி முதல்வர் மாணவர்களிடையே தமிழர் திருநாளின்  பெருமைகளை எடுத்துரைத்துப் பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற  மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச்சிறப்பித்தார். மேலும் வெற்றி பெற்ற மாணவர் குழுவினருக்கு பெசோ நிறுவனத்தின் சார்பில் பரிசு கூப்பன் அட்டையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வைத் தமிழ்த்துறைத் தலைவர் அனுராதா  ஒருங்கிணைத்தார். விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் , மாணவர்கள் என அனைவரும் பங்கேற்று மகிழ்ந்தனர்.