திருப்பூரில் வேலைவாய்ப்புகளை அதிகரித்து, திறன் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் ‘டைட்டன் லீப்’ எனும் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன், திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள இந்த மையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், சங்கத்தின் இணைச் செயலாளர் குமார் துரைசாமி, துணைத் தலைவர் ஸ்ரீதர், டைட்டான் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத் தலைவர் மேஜர் டொமினிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்கத் தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது: ‘திருப்பூரில் தகுதியான தொழிலாளர்கள் குறைவாக உள்ளதால், தற்போது சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளன. முன்பெல்லாம் தொழிற்சாலைகளில் 500 தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றினார்கள். ஆனால், தற்போது 5,000 முதல் 7,000 தொழிலாளர்கள் வரை பணியாற்றுகின்றனர். எதிர்காலத்தில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் 15,000 ஊழியர்களை பணியமர்த்தும் இலக்கு வைத்துள்ளோம். இந்த முயற்சி தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டை ஊக்குவித்து, திருப்பூர் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்’ எனத் தெரிவித்தார்