டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணரும் விதமாகத் தமிழோசை இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு கே.எம்.சி.ஹெச் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்கள் கல்வி கற்கும் வயதில் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதற்குப் பயிற்சி எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழ்மொழி செம்மையான முறையில் வளரும் என்றார்.
அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் தமிழோசை இதழை வெளியிட்டு, “இலக்கியத்தில் தடம் பதிக்கும் தமிழோசை” என்னும் தலைப்பில் பேசியதாவது: மாணவர்கள் கல்வி கற்கின்ற பொழுது படைப்பாற்றல் திறனை உணர்ந்து, அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சமதர்மமும், கல்வியறிவும் மட்டுமே சமூகத்தை முன்னேற்றமடைந்த நிலைக்கு உயர்த்தும். படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்துவதற்கு நிறைய நூல்களைக் கற்றுத் தினமும் அவற்றில் சிறந்த வரிகளைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பெடுத்து வைக்க வேண்டும். அப்பொழுதுதான் சிந்தனைத் திறன் மேம்படும். தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புதிய படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்றார்.
நிகழ்வில், கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் குப்புச்சாமி, முதல்வர் சரவணன், என்.ஜி.பி.கல்விக் குழுமங்களின் இயக்குநர் முத்துசாமி, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
