கேஎம்சிஹெச் மருத்துவமனை சீரற்ற இதயத் துடிப்பு குறைபாட்டிற்கான சிகிச்சையில் ஒரு முக்கிய சாதனையை எட்டியுள்ளது.
இதயத் துடிப்பு சீராக இல்லாத நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிநவீன ‘கிரையோஅப்லேஷன்’ சிகிச்சையை 50 பேருக்கு வெற்றிகரமாகச் செய்து கேஎம்சிஹெச் சாதனை படைத்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டிய இந்தியாவின் மிகச்சிறந்த 6 மருத்துவமனைகளில் ஒன்றாக கேஎம்சிஹெச் இணைந்துள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னைக்கு வெளியே அதிக எண்ணிக்கையில் ‘கிரையோஅப்லேஷன்’ சிகிச்சையை மேற்கொண்ட ஒரே மருத்துவமனை கேஎம்சிஹெச் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதயத் துடிப்பு சீரற்ற நிலையில் இருந்தால் அது ரத்தக் கட்டிகளை உருவாக்கி, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 3 முதல் 5 மடங்கு வரை அதிகரிக்கிறது. தற்போதுள்ள மிக மேம்பட்ட தொழில்நுட்பமான ‘கிரையோபலூன்’ முறையை கேஎம்சிஹெச் இந்த சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறது.
இதில் அறுவை சிகிச்சை இன்றி, தொடைப் பகுதியில் ஒரு சிறிய துளை வழியாக பலூன் போன்ற ஒரு கருவி இதயத்திற்குச் செலுத்தப்படும். அங்கே நைட்ரஸ் ஆக்சைடு வாயு மூலம் அதிகப்படியான குளிர்ச்சி உருவாக்கப்பட்டு, ஒழுங்கற்ற மின் தூண்டல்கள் ஏற்படுத்தும் திசுக்கள் உறைய வைக்கப்படும். இதனால் இதயத் துடிப்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.
கேஎம்சிஹெச் -ன் இந்தச் சிறப்பு மையம் வெறும் சிகிச்சையோடு நின்றுவிடாமல், நோயாளிகளுக்குப் பின்வரும் கூடுதல் வசதிகளையும் வழங்குகிறது: ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் தூக்கக் கோளாறுகளைச் சீர்செய்ய தனிப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள், மொபைல் ஆப் மற்றும் நவீன கருவிகள் மூலம் நோயாளியின் இதயத் துடிப்பை எங்கிருந்தும் கண்காணிக்கும் வசதி, நேரில் வர முடியாதவர்களுக்காக வீடியோ அழைப்பு மருத்துவ ஆலோசனை போன்றவை.
கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில்: இந்த 50-வது கிரையோஅப்லேஷன் மைல்கல்லை எட்டியிருப்பது, இந்திய மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ தொழில்நுட்பத்தை கொண்டு சேர்ப்பதில் கேஎம்சிஹெச் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும்.
1990-ஆம் ஆண்டு எங்களது பயணம் தொடங்கியதிலிருந்தே, சர்வதேச தரத்திற்கு இணையான சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதே எங்களது நோக்கம். இந்த சாதனை, இதய மின்இயங்கியல் துறையில் எங்களின் முன்னோடி நிலையை உறுதிப்படுத்துகிறது என்று கூறினார்.
நிர்வாக இயக்குனர் மருத்துவர் அருண் பழனிசாமி, இந்த சாதனையைப் படைத்த ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் சிறப்பு மையத்தின் மருத்துவக் குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். 50 சிகிச்சைகள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல; துல்லியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 50 நபர்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதை இது குறிக்கிறது. கோயம்புத்தூர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நோயாளிகளுக்கு இத்தகைய உயிர் காக்கும் சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
“கிரையோஅப்லேஷன் பாதுகாப்பான மற்றும் நல்ல பலன் தரும் சிகிச்சை முறையாகும்” என்று இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் தெரிவித்தார்.
