கே.எம்.சி.எச் மருந்தியல் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை
(13.1.2026) பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பண்பாட்டையும், அறுவடைத் திருநாளின் சிறப்பையும் போற்றும் வகையில் கல்லூரி வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

இவ்விழாவினை டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி புவனேஸ்வரன் மற்றும் செயல்பாட்டு அதிகாரி நடேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கல்லூரி முதல்வர் ராஜசேகரன் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக, பொங்கல் பானைகளுக்குப் பூச்சூட்டி, பாரம்பரிய முறையில் புத்தரிசியிட்டு இனிப்புப் பொங்கல் தயார் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் வண்ணமயமான கோலப் போட்டிகள் நடைபெற்றன.

MKCH 2

மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் வடக்கயிறு இழுத்தல் மற்றும் உறியடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அறக்கட்டளை நிர்வாகிகள், இளைய தலைமுறையினர் தங்களது கலாச்சார வேர்களை மறந்துவிடாமல், ஒற்றுமையுடன் இதுபோன்ற பண்டிகைகளைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் என அனைவரும் பாரம்பரிய உடையில் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர்.