நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் மலேசியாவைச் சேர்ந்த முனைவர் மல்லிகா ஆகியோருக்கு இடையே பன்னாட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து, ‘மலேசியத் தமிழர்களின் மொழியுணர்வு’ என்ற தலைப்பில் சிறப்புப் பன்னாட்டு வலையரங்கம் நடைபெற்றது.
கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ் மற்றும் முதல்வர் முனைவர் அருட்சகோதரி மேரி பபியோலா ஆகியோரின் நல்லாசியுடன் இந்நிகழ்வு தொடங்கியது.
இந்த வலையரங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அருளாளர் சாபு அவர்கள் பேசுகையில் “மலேசிய மண்ணில் தமிழை வளர்ப்பதில் ஊடகங்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பங்கு அளப்பரியது. அரசுத் தொலைக்காட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களான கணினி, திறன்பேசி ஆகியவற்றில் தமிழின் பயன்பாடு மலேசியத் தமிழர்களிடையே மேலோங்கியுள்ளது. தமிழின் வேர் தமிழகம் என்றால், அதன் விழுதாக மலேசியா திகழ்கிறது!” எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. மகேஸ்வரி, துறைப் பேராசிரியர்கள் மற்றும் மலேசியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் இணைய வழியாகக் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்வின் நிறைவாக, முனைவர் அருட்சகோதரி கிரேசி நன்றி கூற, பன்னாட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத் தொடக்க விழா மற்றும் வலையரங்கம் நிறைவுற்றது.
