இதய நோயாளிக்கு இரட்டை அறை லெட்லெஸ் பேஸ்மேக்கரை வெற்றிகரமாகப் பொருத்தி சிகிச்சை அளித்துள்ளதின் மூலம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை இதய மருத்துவத்தில் சாதனை படைத்துள்ளது.
வழக்கமான முறையில் நோயாளியின் மார்பில் ஒரு சிறிய துளையிட்டு பேஸ்மேக்கர் பொருத்தப்படும். கழுத்து எலும்புக்கு அருகே தோலுக்கு அடியில் மெல்லிய வயர்கள் மூலம் பேஸ்மேக்கர் சாதனம் இணைக்கப்படும்.
இதற்கு சிறந்த மாற்றான சிறிய வடிவிலான லெட்லெஸ் பேஸ்மேக்கர் வயர்கள் எதுவும் இன்றி மிகச்சிறிய துளையிட்டு கதீட்டர் உதவியுடன் தொடை நாளம் மூலம் நேரடியாக இதயத்தின் வலது கீழறையில் பொருத்தப்படும். இது நோயாளிகளுக்கு மிகவும் செளகரியமானது. பின்விளைவுகள் குறைவு. விரைவான குணம் கிடைக்கும்.
மருத்துவ குழுவினரை பாராட்டி கே.எம்.சி.ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி கூறியதாவது: ஒரு வைட்டமின் கேப்ஸ்யூல் மாத்திரை அளவே உள்ள இந்த சாதனம் இதயத் துடிப்பை முறைப்படுத்தும் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாகும். இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்தப் புதுமையான சிகிச்சையை செய்தனர் எனக் கூறினார்.
கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில்: கே.எம்.சி.ஹெச் இதய மின்இயற்பியல் துறை புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் அறிமுகமான ஒரு மாதத்திற்குள் வயர் இல்லாத பேஸ் மேக்கர் தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது.
வழக்கமான பேஸ் மேக்கர் போல் இல்லாமல் நோயாளியின் எதிர்காலத் தேவைக்கேற்ப இப்புதிய பேஸ் மேக்கர் சாதனத்தை அப்கிரேட் செய்துகொள்வது அல்லது மாற்றிக்கொள்ள முடிவது இதன் சிறப்பம்சமாகும் என்று குறிப்பிட்டார்.
