கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் விண்வெளிக் குழுவின் உறுப்பினருமான கிரண்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசியதாவது: இந்தியாவின் விண்வெளி சாதனைகளையும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் தொலைநோக்குப் பார்வையையும் நினைவு கூர்ந்தார். விண்வெளி ஆய்வுகளின் தொடக்க காலத்தில் இந்தியா சில பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்ததை எடுத்துரைத்தார்.
அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்படுகின்ற தாமதமான வளர்ச்சியானது இதுவரையில் யாரும் கண்டறியாத புதிய கண்டுபிடிப்புகளையும் சாதனைகளையும் செய்ய வழிவகுக்கும். 2035ம் ஆண்டு வானில் இந்தியாவின் விண்வெளி நிலையம் அமையும்.
சவால்களை எதிர்கொள்ளாமல் சாதனைகளைச் செய்ய முடியாது. தோல்வி ஏற்படும் போது அதற்கான காரணத்தையும் அதிலிருந்து மீள்வதற்கான வழியையும் ஆராய்ந்தால் வெற்றி பெறுவது நிச்சயம். உங்கள் வெற்றியே நாட்டின் வெற்றி எனப் பேசினார்.

முன்னதாகக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றி பேசுகையில்: மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் அறிவியல் மற்றும் பொருளாதார வளா்ச்சியை உணர்ந்துள்ள தருணம் இது என்றும், நாட்டுக்கும் மக்களுக்குமான பொற்காலம் என்றும் குறிப்பிட்டார். நமது நூறாவது சுதந்திர நாளில் பாரதம் உலக அரங்கில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கும் என்றும், அதற்கு இளைஞா்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் பேசினார்.
பட்டமளிப்பு நிகழ்வைக் கல்லூரியின் முதல்வர் சங்கீதா தொடங்கி வைத்தார். இளநிலை மற்றும் முதுநிலைத் தேர்வுகளில் தரவரிசைப் பெற்ற 12 பட்டதாரிகளுக்கு முதலில் பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இளநிலை பட்டதாரிகள் 834 பேருக்கும், முதுநிலை பட்டதாரிகள் 211 பேருக்கும் சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார்.
