கோவை கொடிசியாவில் தங்க நகை பூங்கா அமைத்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி, கருத்துக்களை கேட்டார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறுகையில்: குறிச்சி சிட்கோ தொழில்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பீட்டில், 2.46 ஏக்கர் பரப்பில் எல்லா வசதிகளும் கொண்ட தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலே மிகச் சிறந்த பூங்காவாக அமையும்.

பள்ளபாளையம், மோப்பேரிபாளையம் ஆகிய இரண்டு இடங்களில் தனியார் தொழிற்பேட்டை 44 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு அமைக்கப்பட்டு வருகிறது. 8 கோடியே 80 லட்சம் மதிப்பில் பொள்ளாச்சி கயிறு குழுமம் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் திறக்கப்படும்.

செவலம்பாளையத்தில் 18 கோடியே 6 லட்சம் மதிப்பில் தனியார் தொழில்பேட்டை பணி நடைபெற்று வருகிறது.  2 மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று திறக்கப்படும். கிட்டம்பாளையத்தில் 24 கோடி 61 லட்சம் மதிப்பீட்டில் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை பணி ஜூன் மாதம் நிறைவு பெறும்.

குறிச்சி சிட்கோ தொழில்பேட்டையில் ரூ.14 கோடியே 85 லட்சம் திட்ட மதிப்பீடு, 7 கோடியே 94 லட்சம் மானியத்துடன் மின் வாகன மோட்டார் பரிசோதனை மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.