கோவை மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து, சிங்கப்பெண்ணே எனும் தலைப்பில் இலவச கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் ராயல் கேர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும் மேலும் எச். பி. வி தடுப்பூசியை பொதுமக்களிடம் ஊக்குவிப்பதில் அதீத கவனம் செலுத்துகிறது.
ரூ. 44 லட்சம் மதிப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 3000 மதிப்புள்ள தடுப்பூசி ஒவ்வொரு பயனாளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை ரோட்டேரியன் சுந்தரவடிவேலு மாவட்ட ஆளுநர் கோவை மாவட்டம் 3201 ( சுழற் சங்கம் இந்தியா) தொடங்கி வைத்து, பெண்களின் சுகாதார சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். கௌரவ விருந்தினர்களாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா மற்றும் ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் குறைப்பதில் தடுப்பூசியின் பங்கு குறித்து எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், ரோட்டரி தலைவர் ராஜேந்திரன் மற்றும் செயலாளர் மோகன் சந்தர், ராயல் கேர் மருத்துவமனையின் மருத்துவர் பிரேம லதா உள்ளிட்டோர் பங்கேற்று இது போன்ற பயனுள்ள முன்முயற்சிகள் மூலம் சமூக சுகாதாரம் மற்றும் இத்திட்டமானது கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களின் சுகாதாரம் மேம்பாட்டை உறுதி செய்யும் விதமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.