கோவை தேவராயபுரத்தில் காட்டு யானை தாக்கி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் கால்நடை மருத்துவர் விஜயராகவனை நேரில் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நலம் விசாரித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்: தொண்டாமுத்தூர் பகுதியில் யானை தொந்தரவு அதிகமாக உள்ளது. ரலக்ஸ் என்ற காட்டுயானை தொடர்ந்து ஊருக்குள் வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கும்கி யானை வைத்து அடர்ந்த காட்டுக்குள் விரட்ட நினைத்தாலும் அது முடியவில்லை.
கோவையில் யானை மனித மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தாளியூர், நரசிபுரம், அட்டுக்கல் ஆகிய பகுதிகளில் தொடர் பிரச்சனை உள்ளது. கர்நாடக மாநிலத்தில் அமைத்துள்ளதை போல தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். ரயில் தண்டவாளங்களில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அதிகமான பேர் வனத்துறையில் நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது குறைவாக உள்ளனர். வனத்துறையினருக்கு தேவையான உபகரணங்களை அரசு வழங்க வேண்டும்.
யானை மனித மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் கூடிய விரைவில் நடைபெறும். ஆனால், எந்த போராட்டம் நடத்தினாலும் அரசு செவி சாய்ப்பதில்லை. யானைகள் தாக்கி உயிர்கள் இறப்பு ஏற்பட்டாலும் அரசு மெத்தனப்போக்குடன் இருக்கிறது. கோவையில் பாலங்கள், சாலை பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்றார்.
