கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை கண்டித்து இன்று மாலை பாஜக மகளிர் அணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், வரும் புதன்கிழமை (நவம்பர் 5) தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீளமேடு பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தமிழகத்திலே மிகவும் பாதுகாப்பான நகரம் என கருதப்பட்ட கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. பெண்களை பாதுகாப்பதாக கூறும் திராவிட மாடல் திமுக அரசின் தோல்வியை இச்சம்பவம் காட்டுகிறது.

மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் சம்பவங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்ற பாலியல் சம்பவங்களுக்கு காரணமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உள்ளன.  கோவையில் போதை பொருட்கள் அதிகமாக புழங்குகிறது. அதனை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர் மீது குண்டர் சட்டம் மற்றும் தூக்கு தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பேசுகையில்: தமிழகத்தில் நடைபெற்று வரும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தில் பேசியபோதும் மாநில அரசு சார்பில் உரிய பதில் தரப்படவில்லை. பெண்களை பாதுகாக்க வேண்டிய அரசு அதை செய்யாத போது, உரிய பாதுகாப்பு விஷயங்களை பெண்களே முன்னெச்சரிக்கையாக செய்து கொள்ள வேண்டிய நிலை தமிழகத்தில் உள்ளதாக தெரிவித்தார்.