தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, கிரடாய் கோவை அமைப்பு நிர்வாகிகள், சந்தித்து கோவை உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.
சமீபத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் சார்பில், கோவை உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டம் வெளியிடப்பட்டது.
அரசு அலுவல் நடைமுறைகளில் ஒப்புதல் பெறும் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தி, தமிழ்நாட்டில் முதல் முறையாக இணைய தளம் வாயிலாகச் சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடி ஒப்புதல் பெறும் சுயசான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, கிரடாய் கோயம்புத்தூர் தலைவர் அரவிந்த் குமார், துணைத் தலைவர் ராஜீவ் ராமசாமி, பொருளாளர் கார்த்திக் குமார், உறுப்பினர் சந்திரமௌலி, தமிழ்நாட்டின் கிரடாய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குகன் இளங்கோ, பொது மேலாளர் பாலச்சந்திரன் மற்றும் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து கிரடாய் கோவை தலைவர் அரவிந்த் குமார் வெளியிட்ட அறிக்கையில், புதிய மாஸ்டர் பிளானுக்காக 30 ஆண்டு காலம் கோவை மக்கள் காத்திருந்தனர். அதனை தற்போது முதலமைச்சர் வெளியிட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
கோவை மாஸ்டர் பிளான் – 2041 எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நுணுக்கமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் அடுத்த 16 ஆண்டுகளில் ரூ 25,000 கோடி அளவிற்கு முதலீடுகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் ரூ 35,000 கோடி முதலீடு செய்யப்படும். இதனால் கோவைப் பகுதி பெரும் வளர்ச்சியைக் காண உள்ளது என்றார்.
