கோவை மாநகரத்தில் அதிக அளவில் வணிக நடவடிக்கை நிகழும் பகுதியில் ஒன்று ஆர்.எஸ். புரம். இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளை சேர்ந்த கோவையின் முன்னணி நிறுவனங்கள் இங்கு இயங்கிவருகின்றன. இந்த இடத்தில் கோவை மாநகரத்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுவர முக்கிய காரணமாக இருந்தவர்களுக்கும், பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளங்கியவர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அவர்களின் படங்கள் மற்றும் பங்களிப்பு அடங்கிய ‘லெஜெண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர்’ தகவல் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

இவை பல மாதங்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்துவருவது அப்பகுதியை சேர்ந்தவர்கள் பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பல தகவல் பலகைகள் சேதமாகியும், படங்கள் மங்கியும் உள்ளது. இதை மாநகராட்சி விரைந்து சரி செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபற்றிய புகார்கள் கோவை மாநகராட்சிக்கு சென்றதை அடுத்து சேதமாகி உள்ள பலகைகளை உடனே சரிசெய்ய மாநகராட்சி ஆணையரால் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் குறைகள் சரிசெய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் கூறியிருக்கிறார்.