தமிழக ஜவுளி துறையினர் 2025ம் ஆண்டில் சந்தித்த சவால்கள் குறித்தும், 2026 வருடத்தின் எதிர்பார்ப்புகளும் குறித்தும் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் விரிவாக விளக்கியுள்ளார்.
இதுகுறித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பாலீஷ்டர் விஸ்கோஸ் செயற்கை இழை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை. அடிப்படை பணிக்கு தமிழகத்தில் ஆட்கள் பற்றாகுறை அதிகரிப்பதினால் கடந்த 15 ஆண்டு காலமாக பிற மாநில தொழிலாளர்களை சார்ந்தே தமிழக உற்பத்தி துறை உள்ளது. கடந்த நான்கு ஆண்டு காலமாகவே குறுசிறு நிறுவனங்களுக்கு வழங்கும் மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 2 ரூபாய் விலை அதிகம்.
தமிழக அரசு மாநில தொழில்நலன் கருதி போர்கால அடிப்படையில் செய்யவேண்டியது:
பருத்தி பரப்பளவை அதிகரித்து விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 10000 மானியம் அளித்து தரமான விதைகளையும், முதல் தரமான உரங்களையும் வழங்கி நிபுணர்கள் துணையுடன் பருத்தி விளைச்சலை அதிகரிக்க வேண்டும்.
செயற்கை இழை நிறுவனம் தமிழகத்தில் துவங்க ஊக்குவித்தால் அதன்மூலம் கிடைக்கும் மாநில வரி வருவாயையும் உயர்த்த இயலும்.
ஜவுளி சாயம் இட வட மாநிலத்தை விட தமிழகத்தில் அதிகம் என்பதால், காடா உற்பத்தி செய்து குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வருவதினால் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் வரை போக்குவரத்து செலவாகின்றது. அரசு தமிழகத்திலேயே பொது சுத்தகரிப்புநிலையம் அமைத்து வட இந்திய நிறுவனங்களுக்கு இணையாக குறைந்த செலவில் சாயம் இடும் தொழில்சாலைகள் அமைத்து கொடுத்தால் போக்குவரத்து செலவில் ஏற்படும் சேமிப்பே ஜவுளி துறை வளர்ச்சியை இரட்டிப்பாக்கும்.
ஏற்கனவே வாடகை கட்டடத்தில் தொழில் செய்பவர்களுக்கு அவர்களின் முந்தைய வணிகவரியை மதிப்பிட்டு, மானிய விலையில் நிலங்களை கிரய அடிப்படையில் வழங்க வேண்டும்.
மத்திய அரசுடன் இணைந்து கொண்டு வந்த மித்ரா பார்க் திட்டம் எதிர்பார்த்த பலன் கிடைக்க பயனாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை இலவசமாக ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டும்.
மாநில வணிக வரி தொழில்சாலை மற்றும் தொழிலாளர் விதிகளை முறையாக பின்ற்றும் நிறுவனங்களுக்கு மானியங்கள் அளித்து முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கேட்டுகொண்டுள்ளார்.
