கோவை மாநகரக் காவல்துறையும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து கல்லூரிகளுக்கு இடையிலான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நாடகப் போட்டியை நடத்தின.
மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “இன்றைய படித்த இளைஞர்களிடையே போதைப்பொருட்களின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் தேவை. இந்தியாவில் 14 முதல் 16 வயது வரையிலான இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான முக்கிய ஆதாரம். உழைக்கும் மக்கள் தொகை அதிகரிக்கும்போது, நாட்டின் பொருளாதாரம் தானாகவே உயரும். இத்தகைய சூழலில், இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு போதைப்பழக்கம் ஒரு பெரிய தடையாக உள்ளது. இது இளைஞர்களின் வாழ்க்கையை அழித்துவருகிறது. எனவே, போதைப்பொருட்களை சமுதாயத்தில் இருந்து முழுமையாக ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்தப் போட்டியில் 52 கல்லூரிகளைச் சார்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவ ஆலோசகர், கோயம்புத்தூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் நடுவர்களாக பங்கேற்று, முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.