சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ப்ரோபா-3 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று மாலை 4:12 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இஸ்ரோ நிறுவனமானது, வெற்றிகரமாக சந்திராயன்-3 விண்கலத்தைச் செலுத்தி நிலவின் தென் துருவத்திற்கு அருகே பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆதித்யா எல் 1 விண்கலம் மூலம் சூரியனின் மேற்பரப்பு குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. மேலும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணியையும் இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ)கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம்(என்ஐஎல்எஸ்)வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சூரியனின் புறவெளியை ஆராய்வதற்காக ப்ரோபா-3 எனும் செயற்கோள்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு  நிறுவனம் வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்த இஎஸ்ஏ நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ப்ரோபா-3 செயற்கைக்கோள்கள் புவியிலிருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அங்கிருந்தபடியே 2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்பவுள்ளன.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ப்ரோபா-3 எனும் இரட்டை ஆய்வு மையத்திலிருந்து நேற்று (டிச.4) விண்ணில் ஏவத் தயார்நிலையில் இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணத்தினால் இன்று மாலை 4.12 மணிக்கு ஏவப்படத் தயார் நிலையில் உள்ளது.