கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழாவானது, பல்கலைக்கழகத்தின் வேந்தர் இராமசாமி தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் வசந்தகுமார் மற்றும் தமயந்தி வசந்தகுமார் முன்னிலை வகித்தனர். முதன்மைச்செயல் அலுவலர் முருகையா, துணைவேந்தர் வெங்கடாசலபதி,ரவி, தேர்வாணையர் பழனிவேலு மற்றும் முதன்மையர்கள் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக தைரோகேர் அமைப்பாளர் வேலுமணி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, பேருரை நிகழ்த்தினார். அவர்தம் உரையில், ‘பண்பட்ட கல்வியே சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை. தனிமனித ஒழுக்கத்திலும், சமுதாயப் பொறுப்புணர்விலும், திறன் மேம்பாட்டிலும் சிறந்த மாணவர்கள் உயர்ந்த சமுதாயத்தைக் கட்டமைக்கின்றனர். அவர்களது பெருமுயற்சிக்கு கல்வியே தலைச்சிறந்த கருவி. நாட்டின் உயர்வே அவர்களது கல்வியின் பெரும்பயன். மாணவர்கள் அத்தகைய பொதுநல நோக்கத்துடன் சிறந்த ஆளுமைகளாக மிளிர வேண்டும். புதிய கல்விக்கொள்கை முதலானவை திறன் மேம்பாட்டிற்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் துணைசெய்வதை மாணவர்கள் உணர வேண்டும். அவர்கள் தமது ஆய்வுப்பங்களிப்பின் வாயிலாக நாட்டின் அனைத்துத் துறைச்சார்ந்த வளர்ச்சிக்கும் ஆக்கம் சேர்க்க வேண்டும். இந்தியா இன்றளவில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் முன்னிடம் வகிக்கிறது. இச்சாதனைக்கு இந்திய மாணவர்களின் அறிவும், ஆளுமையும் அடிப்படை. மாணவர்கள் இதனை உணர்ந்து அடிப்படைக் கல்வி, மருத்துவம் முதலானவற்றுடன் அறிவியல் ஆக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அனைத்து மக்களையும் சென்றடைவதற்கு பொதுநல நோக்கத்தில் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதில் 2644-மாணவர்கள் பட்டம் பெற்றனர். 51-மாணவர்களுக்குத் தங்கப்பதக்கங்களும், பல்வேறு துறைகள் சார்ந்த ஆய்வாளர்கள் 52-பேருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டன.