செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, இந்தோனேசியாவின் உதயண பல்கலைக்கழகம் மற்றும் புலம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் இணைந்து நடத்தும் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நேற்று (நவ. 20) கல்லூரி வளாகத்தில் உள்ள மு.மா. ஆறுச்சாமி கலையரங்கில் தொடங்கியது.

3a 7 scaled

‘பாரதத்தின் எதிரொலிகள்: தொன்மை, கலைப்பொருட்கள் மற்றும் பண்டைய ஞானம்’ என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில், செப்பேடுகள் மற்றும் தொல்பொருட்கள் வாயிலாக தமிழர்களின் பண்பாடு, நிர்வாகத் திறன், வணிக மேன்மை, மொழி வளர்ச்சி, உலகளாவிய பண்பாட்டுத் தொடர்புகள் மற்றும் தொன்மையான அறிவியல் சிந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடக்க விழாவில், கல்லூரியின் அரசு உதவி பெறும் பிரிவு தமிழ்த்துறைத் தலைவர் மணிமேகலை வரவேற்றார். கல்லூரி செயலர் மற்றும் இயக்குனர் சி.ஏ. வாசுகி, பாரதத்தின் தொன்மை, கலைப்பொருட்கள் மற்றும் பண்டைய ஞானத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அரசு உதவி பெறும் பிரிவு தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சதீஷ்குமார் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார்.

3c 1 scaled

இந்தோனேசியா உதயண பல்கலைக்கழக மொழியியல் துறை பேராசிரியர் மேட் நேத்ரா, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் சங்கீதா கருத்தரங்கின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து, இரு கல்வி நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. 119 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவை சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

3b 1 scaled

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஜெகநாத், ஆனைமலை செப்பேட்டை மீட்டெடுத்தது தொடர்பான செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில், பத்மஸ்ரீ திருத்தணி சுவாமிநாதன் ஓதுவாமூர்த்திகளுக்கு, கல்லூரி செயலர் மற்றும் இயக்குனர் சி.ஏ. வாசுகி, ‘கொங்குநாடு செந்தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கி கவுரவித்தார்.

முதல் நாள் நிகழ்வில் இரண்டு அமர்வுகள் நடைபெற்றன. முதல் அமர்வில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஜெகநாத் கருத்துரை வழங்கினார். சென்னை தமிழ்நாடு தொல்லியல் துறை விக்னேஷ் சீனிவாசன் அமர்வுத் தலைவராகப் பங்கேற்றார். சுயநிதிப் பிரிவு தமிழ்த்துறைத் தலைவர் (பொ) ராஜலட்சுமி ஒருங்கிணைத்தார்.

இரண்டாம் அமர்வில் இந்தோனேசியா உதயண பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் மேட் நேத்ரா கருத்துரை வழங்கினார். அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் சேனாவரையன் அமர்வுத் தலைவராகப் பங்கேற்றார். சுயநிதிப் பிரிவு தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார்.