சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களுக்கு பாராட்டு விழா, செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் எம்.எம்.ஏ அரங்கில் நடைபெற்றது,
விழாவில் எக்செல் குழும நிறுவனங்களின் தலைவர் முருகானந்தம், நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகைச்செல்வன், நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர் குமரவேல், பேச்சாளர் செல்வேந்திரன் மற்றும் திலகபாமா ஆகியோர் அவரவர் வாழ்வில் சுகிசிவம் அவர்களின் பேச்சு, எழுத்து எந்த வகையில் தங்களுடைய வாழ்க்கை அனுபவத்தில் பயன்பட்டது என வாழ்த்துரையில் பேசினர்.

இலக்கியச் சொற்பொறியாளர் சிவசத்திவடிவேல், பட்டிமன்றப் பேச்சாளர் சிவகுருநாதன், பேச்சாளர் இந்திரா விஜயலட்சுமி, இசைக்கலைஞர் சுசித்ரா பாலசுப்ரமணியன், சமயச் பொற்பொறியாளர் சதீஸ்குமார் ஆகியோர் சுகிசிவம் அவர்களுடன் ஏற்பட்ட தங்களுடைய அனுபவங்களை புகழுரையில் பேசினர்.

நிகழ்வில் கோவை நகைச்சுவை சங்கத்தின் செயலாளர் தனபால் பேசுகையில்: சில ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சி, இளம் பேச்சாளர்களை தேடும் இறுதி கட்டத்தில் மூன்று பேர் அடங்கிய நடுவர் குழுவில் சுகிசிவம் ஐயாவும் ஒருவர். ஐயாவும், மற்ற நடுவர்களும் தேர்தெடுத்த ஒருவர் வெற்றிபெற்றவராக அறிவித்தனர்.
அந்த போட்டியில் இரண்டவதாக வந்த ஒரு இளம் பேச்சாளரின் பேச்சு ஐயாவை கவர்ந்தது. அந்த போட்டி நடந்த சில நாட்களில் கோவை நகைச்சுவை சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள சுகிசிவம் ஐயா கோவை வந்தார்.

என்னை அழைத்து ஒருவரின் மொபைல் எண், பெயரை கொடுத்து, அவரை கோவைக்கு நமது நிகழ்ச்சிக்கு அழைக்குமாறு கூறினார், அவரும் வந்து கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் இளம் பேச்சாளர் ஒருவரை அறிமுகம் செய்து, போட்டியில் இரண்டாவதாக வந்த காரணத்தை கூறி, அவரின் திறமையை பாராட்டி தன் சொந்த பணம் ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கினார். இந்த சம்பவத்தை தன் பேச்சில் குறிப்பிட்டு, தனபால் பேசினார்.
தொடர்ந்து ஏற்புரையில் சுகிசிவம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
