கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநரும், சிந்தனைக் கவிஞருமான முனைவர் கவிதாசன் கலந்துகொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் முன்னாள் ஆசிரியர்கள் மூவர் கௌரவிக்கப்பட்டனர்.
முன்னதாக கவிதாசன் பேசுகையில், மாணவர்களை வெறும் ஏட்டுக்கல்வி பயில்பவர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களைச் சமுதாயத்தில் சிறந்த சாதனையாளர்களாகவும் வெற்றியாளர்களாகவும் உருவாக்குவதே ஒரு சிறந்த ஆசிரியரின் கடமையாகும். வகுப்பறையில் அமர்ந்திருக்கும் ஒரு மாணவன் பிற்காலத்தில் உயர்ந்த நிலையை அடையும் போதுதான், அந்த ஆசிரியரின் உழைப்பு உண்மையான வெற்றியை அடைகிறது, என கூறினார்.

ஆசிரியர்கள் என்பவர்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள். தங்களை உருக்கிக்கொண்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு வெளிச்சம் தருகிறார்கள். ஒரு சிற்பி கல்லைச் செதுக்கிச் சிலையாக்குவது போல, மாணவர்களின் பலவீனங்களை நீக்கி அவர்களின் உள்ளார்ந்த திறமைகளைக் கண்டறிந்து மெருகேற்றுபவரே உண்மையான ஆசிரியர். பாடங்களை மட்டுமே கற்பிப்பது ஆசிரியப் பணியல்ல. ஒழுக்கம், தன்னம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் துணிவு ஆகிய வாழ்வியல் நற்பண்புகளை மாணவர்களுக்கு ஊட்டி வளர்ப்பதே ஆசிரியர்களின் தலையாய பணியாகும் என்று குறிப்பிட்டார்.
