தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த நடைமுறை செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்காக மருதமலை கோயிலில், அடிவாரத்தில் உள்ள படிக்கட்டு பாதை அருகிலும், மலைமேல் கார் பார்க்கிங் பகுதியிலும் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை இங்கு ஒப்படைத்து, தரிசனத்துக்குச் செல்லலாம்.
ஒரு மொபைல் போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போனை ஒப்படைக்கும் பக்தரின் புகைப்படம், மொபைல் எண் மற்றும் ஒப்படைக்கப்படும் போன்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் கோயில் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பின்னர், பக்தர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.
ஒப்படைக்கப்பட்ட மொபைல் போன்கள், ஒப்புகை சீட்டின் நகலுடன் பாதுகாப்பான லாக்கரில் வைக்கப்படுகின்றன. தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள், குறிப்பிட்ட கவுன்டரில் ஒப்புகை சீட்டை வழங்கி தங்களது போனை பெற்றுக்கொள்ளலாம்.

போனை திரும்ப வழங்கும்போது, ஒப்புகை சீட்டில் உள்ள டோக்கன் எண் மற்றும் பக்தரின் மொபைல் எண்ணை சரிபார்ப்பதுடன், போனை ஒப்படைத்த நபரும், அதை பெற்றுக்கொள்ள வருபவரும் ஒரே நபரா என்பதும் புகைப்படத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. அதன்பிறகே மொபைல் போன் சம்பந்தப்பட்ட பக்தரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
பாதுகாப்பு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொபைல் போன்களை ஒப்படைக்க இரண்டு கவுன்டர்களும், தரிசனம் முடித்து போன்களை பெற்றுக்கொள்ள இரண்டு கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு காத்திருப்பு நேரம் குறையும் எனக் கூறப்படுகிறது.
மேலும், ராஜகோபுரம் மற்றும் படிக்கட்டு பாதை வழியாக கோயிலுக்குள் செல்லும் பக்தர்களிடம் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி, அவர்கள் மொபைல் போன் எடுத்துச் செல்கிறார்களா என்பது கண்காணிக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மொபைல் போன் பாதுகாப்புக்கான கட்டணத்தை விரைவில் ஆன்லைன் மூலமாக செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
