ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பாலக்காடு இந்திய தொழில்நுட்பக் கழகம் இடையே கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஐஐடி பாலக்காடு தொழிற்துறை மற்றும் நிதி ஆராய்ச்சித் தலைவர் அரவிந்த் அஜய், நிர்வாகப் புல முதன்மையர் பிபுரஞ்சன் சாரங்கி மற்றும் மின் பொறியியல் துறை இணைப் பேராசிரியர் சுக்கோமல் டே, ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டேவிட் ரத்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் இரு நிறுவனங்களும் இணைந்து கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்ளுதல், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஆராய்ச்சி திட்டங்களுக்குத் தேவையான நிதியுதவிகளை இணைந்து பெறுதல் ஆகியவை ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் எதிர்காலத் தொழில்நுட்ப ஆராய்ச்சி விரிவடைவதுடன், மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உருவாகும் என எதிர்பார்ப்பதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்
