ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் ஐ ஜீனியஸ் ஏஐ பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான 24 மணிநேர ஹேக்கத்தான் 3.0 போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது.
நிறைவு விழாவிற்கு, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக, சிங்கப்பூர் ஐ ஜீனியஸ் ஏஐ பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் காளிராஜன் பஞ்சலிங்கம், சிறப்பு அழைப்பாளராக பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜவேல் கலந்து கொண்டனர்.
தொழில், புதுமை மற்றும் உட்கட்டமைப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், பொருளாதார வளர்ச்சி, வறுமையின்மை, ஆரோக்கியம் உள்ளிட்ட 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு ஹேக்கத்தான் போட்டி நடந்தது.
தகுதி வாய்ந்த 100 அணிகள் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். இறுதிப் போட்டியில் முதல் பரிசு பெற்ற பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி அணிக்கு ரூ. 1,00,000, 2ம் பரிசு பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிக்கு ரூ.50,000 மற்றும் 3ம் பரிசு பெற்ற கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணிக்கு ரூ.30,000 ரொக்கம் வழங்கப்பட்டன.
ஹேக்கத்தான் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட முதல் மூன்று அணிக்கு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் அறிவியல் மற்றும் புதுமை போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். அதற்கான அனைத்து செலவினங்களையும் ஐ ஜீனியஸ் ஏஐ நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது.
ஐ ஜீனியஸ் நிறுவனம் இலவச மைக்ரோசாஃப்ட் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளையும், நேரடி தொழில்துறை திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்புகளையும் வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
