மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டமைப்பின் செயற்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு, ஜவுளித் துறையின் தற்போதைய நிலை மற்றும் தொழில்துறையினரின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தொழில்துறையினரின் நீண்டகால கோரிக்கைகளை வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

1. உயர் அழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள 1 மெகாவாட்க்கு குறைவான தொழில் நிறுவனங்களுக்கான டிமாண்ட் கட்டணத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும். எல்.டி.சி.டி மின் இணைப்பு பெற்றுள்ள தொழில் நிறுவனங்களுக்கான நிலைக் கட்டண உயர்வை 50 சதவீதம் குறைக்க வேண்டும்.

2. எல்.டி.சி.டி பிரிவில் 150 கிலோவாட் உச்சவரம்பை 200 கிலோ வாட்டாக உயர்த்துவதுடன், 100 கிலோவாட்டிற்கு மேல் மின் பயன்பாடு உள்ள நிறுவனங்கள் தனியார் மின் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

3. எல்.டி.சி.டிபிரிவில் 150 கிலோவாட் மின் இணைப்பு பெற்றுள்ள நிறுவனங்களிடம் உயர் அழுத்த இணைப்புக்கு இணையாக வசூலிக்கப்படும் டிமாண்ட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

4. சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்து, மாநில அரசுக்கு வரி செலுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வீலிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

5. தொழில் பேட்டைகளில் அரசு சார்பில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், எரிவாயு வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். ஏற்கனவே உள்ள தொழில் பேட்டைகளிலும் இவ்வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

6. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த மாவட்ட வாரியாக வணிக வளாகங்கள் அமைக்கவும், சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்க தொழில்துறையினருக்கு மானியம் மற்றும் வழிகாட்டுதல் வழங்கவும் வேண்டும்.

7. கொச்சி – சேலம் எரிவாயு குழாய் திட்டப் பணிகளை விரைந்து முடித்து தொழில்துறையின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து, பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மாநில தலைவர் ஜெயபால் வலியுறுத்தினார்.