மாசுபட்ட காற்றை நீண்ட காலம் சுவாசிப்பது நுரையீரலை மட்டுமல்ல, மனித மூளையையும் கடுமையாக பாதித்து ‘டிமென்ஷியா’ எனப்படும் ஞாபக மறதி நோயை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.
டிமென்ஷியாவை ஏற்படுத்தும் 14 முக்கிய ஆபத்துக் காரணிகளின் பட்டியலில் காற்று மாசுபாட்டையும் உலக சுகாதார நிறுவனம் தற்போது இணைத்துள்ளது.
மருத்துவ ஆய்வுகளின்படி, காற்றில் உள்ள PM2.5 போன்ற நுண்துகள்கள் சுவாசத்தின் மூலம் உடலுக்குள் நுழைந்து, ரத்த ஓட்டம் வழியாக மூளையை அடைகின்றன. இதனால் மூளையில் அழற்சி ஏற்பட்டு, நரம்பு செல்கள் சேதமடைவதுடன் நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறன் படிப்படியாகக் குறையக்கூடும்.
இந்தியாவில் வெளிப்புற காற்று மாசுபாடு மட்டுமின்றி, வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசுபாடும் டிமென்ஷியா பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மர விறகு, நிலக்கரி, மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தி சமைப்பது, புகையிலை, புகை மற்றும் போதிய காற்றோட்டமின்மை ஆகியவை வீட்டுக்குள் காற்றின் தரத்தை மோசமாக்குகின்றன.
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் காற்று மாசுபாட்டால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட ஆபத்துக் காரணிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் சுமார் 45 சதவீதம் டிமென்ஷியா பாதிப்புகளைத் தடுக்க முடியும்.
