தமிழகத்தில் ஆண்டுக்கு குறைந்தது 10,000 பேராவது சாலை விபத்துகளில் உயிரிழந்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை உடனே மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தால் சிகிச்சை மூலம் காப்பாற்ற வாய்ப்புள்ளவர்கள் மரணிக்கும் சம்பவங்களை தவிர்க்க முடியும்.

இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதை ஊக்குவிக்கவும், தமிழக அரசு தரப்பில் பல ஆண்டுகளாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதுபற்றிய ஒரு விழிப்புணர்வு செய்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவில் வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ.10,000/-பரிசாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவிகளை பொதுமக்கள் செய்ய வேண்டும் என்பது ஆகும். ஒரு ஆண்டில் அதிக பட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.

சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர். அனைத்து விபத்துகளும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும். இதில் தெரிவு செய்யப்படும் தேர்வுகள், ரூ.10,000/-பரிசுத்தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
boardf 1 scaled