ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுநிலை பன்னாட்டு வணிகவியல் துறையின் இரண்டாமாண்டு மாணவர் கோவிந்த், 2025 – 2026ம் ஆண்டிற்கான சிறந்த பந்து வீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2025 – 2026ம் ஆண்டில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடிய கோவிந்தை சிறந்த பந்து வீச்சாளராகத் தேர்வு செய்து, இந்த ஆண்டிற்கான சீனிவாசராகவன் நினைவு விருதினை வரும் ஜூலை 4 அன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்வில் வழங்கவுள்ளது.
விருதினைப் பெறவுள்ள மாணவரை, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் பேசும்போது: கிரிக்கெட் விளையாட்டில் எங்கள் கல்லூரி மாணவ, மாணவியர் எப்போதும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கல்லூரியின் முன்னாள் மாணவர் ஜெகதீசன், தற்போதைய மாணவர்கள் கோவிந்த், அஜிதேஷ் ஆகியோர் எல்லாப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கல்லூரிக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.
விளையாட்டுத் துறையில் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்காகவே நடப்பு கல்வியாண்டில் பிரத்யேகமாக பி.எஸ்சி. ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் துறை தொடங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற கல்வியையும் இக்கல்லூரி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர் கோவிந்த் பெறும் இந்த விருது இளம் விளையாட்டு வீரர்களுக்கு நிச்சயம் ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டார்.
