கோவை சூலூர் சட்டமன்ற தொகுதியின் தவெக எம்.எல்.ஏ., சுகுமார், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை புரிந்தனர். கோவை விமான நிலையத்தில் இருவருக்கும் அக்கட்சியின் தொண்டர்கள் விசில் அடித்தும் பொன்னாடை அணிவித்தும் மலர் கொத்துக்கள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுகுமார் பேசுகையில்: சூலூர் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன். தொகுதி மக்களை சந்தித்து நன்றி கூற செல்ல உள்ளேன்.

அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு போட்டி நிலவுகிறதா என்ற கேள்விக்கு, அதனை தலைமை தான் முடிவு செய்யும். அரசியல் அனுபவமே தெரியவில்லை என்று கூறியவர்கள் கூட வாயடைத்துப் போகும்படி விஜய் செயல்பட்டு வருகிறார். தெளிவாக இருக்கிறார். எனவே அவரே முடிவுகளையும் எடுப்பார்.

சட்டமன்ற உறுப்பினராக முதலில் சூலூர் குளத்தை தூர்வாரும் பணிகளை செய்ய உள்ளேன். அந்த தொகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி, சாலை வசதி, கழிவறை வசதி, குடிநீர் பிரச்சனையை சரி செய்து தருவேன்.

தவெகவில் இரண்டு தினங்களில் முக்கியஸ்தர்கள் சிலர் இணையப் போகிறார்கள். கோவையில் தற்பொழுது ஆறு தொகுதிகளை தவெக பெற்றுள்ள நிலையில் அடுத்து 10 தொகுதிகளையும் பெறுவோம். அதற்கான மக்கள் ஆதரவு உள்ளது. யார் யாரெல்லாம் வந்து இணைய போகிறார்கள் என்று என்னால் கூற முடியாது. ஆனால் குறிப்பாக திமுகவில் இருந்து இணைவார்கள் என்று தெரிவித்தார்.