தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியல் சமன்பாட்டையே மாற்றியமைத்துள்ளன. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பிறகு வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகள், தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அதில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததன் மூலம் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக மொத்தமாக 1 கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகளைப் பெற்று 34.92 சதவீத வாக்கு விகிதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

திமுக 176 தொகுதிகளில் போட்டியிட்டு 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 1 கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 வாக்குகள் (24.19%) பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

172 தொகுதிகளில் களம் கண்ட அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று, 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 வாக்குகள் (21.21%) பெற்றுள்ளது.

தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 19 லட்சத்து 72 ஆயிரத்து 537 வாக்குகள் பெற்று 4 சதவீத வாக்கு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.

தேசிய கட்சியான, காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்று 3.37 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 33 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று 2.97 சதவீத வாக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று 0.29 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்று 1.20 சதவீத வாக்குகளைப் கைப்பற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களிலும் வெற்றி பெற்று தலா 0.66 மற்றும் 0.60 சதவீத வாக்குகளைப் பதிவு செய்துள்ளன.

பாமக 18 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்று 2.37 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. விசிக 8 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களை வென்று 1.09 சதவீத வாக்கு விகிதத்தைக் கைப்பற்றியுள்ளது. அமமுக 11 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று 0.86 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

234 தொகுதிகளிலும் நோட்டாவுக்கு 1 லட்சத்து 99 ஆயிரத்து 801 வாக்குகள் பதிவாகியிருப்பது, பாரம்பரிய அரசியல் கட்சிகளின் மீதான அதிருப்தியை பிரதிபலிக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவுகளை 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் வாக்கு வங்கியில் சரிவை சந்தித்துள்ளன. தவெக தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய சக்தியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.