நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்கும் எனவும் ஊடகங்கள் எதிர்பார்ப்பதை விட கூடுதலான சீட்டுகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் எனவும் திமுகவின் மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தனியார் ஊடகத்திற்கு அவர் வழங்கிய பேட்டியில், கோவை & கோவை தெற்கில் போட்டியிடுவது பற்றி  அவர் பேசுகையில், ஏற்கனவே தான் முதலமைச்சருடைய வழிகாட்டுதலோடு கோவையினுடைய பொறுப்பு அமைச்சராக 4 ஆண்டுகளுக்கு மேல் இயக்கத்தினுடைய பணிகளையும் அரசு பணிகளையும் கவனித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில மாவட்டம் முழுவதும் எங்கு என்ன தேவைகள் உள்ளது என்பதை தனது முழுவதுமாக தெரியும் என கூறினார். கோவைக்கான பல்வேறு திட்டங்களை முதலமைச்சரிடம் கேட்டு வாங்கி செயல்படுத்தியாதாக கூறிய அவர்,  இங்கு தொழில்துறை வளர்ச்சி, மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்கு சிறப்பு கவனங்களை எடுத்து மேலும் நிறைய திட்டங்களை செய்ய உள்ளதாகவும் பகிர்ந்துகொண்டார்.

“கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை இன்னும் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டிய ஒரு தொகுதியாக இருக்கிறது. முழுமையாக அனைத்து வார்டுகளுக்கும் என்னென்ன தேவை இருக்கிறது என்பதை எடுத்து, அந்தப் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கான முழு முயற்சிகளை எடுப்பேன்,” என்று உறுதியாக கூறினார்.

2 மணி நேரம் மட்டுமே உறக்கம்

மேற்கு மண்டலத்திற்கான தேர்தல் பணிகளை கவனித்து வரும் செந்தில் பாலாஜி ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே உறங்குவதாகவும், சில நேரங்களில் காரில் நெடுந்தூர பயணமிருக்கும் போது, சற்று நேரம், தூங்கிக்கொள்வதாக கூறினார்.

“வேலையை சிறப்பாக செய்யவேண்டும் என்ற இலக்குடன் எல்லாரும் சேர்ந்து பயணிக்கிறோம். இதில் நிச்சயமாக ஒரு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” எனவும் அவர் கூறினார்.