கோவையில் திமுக தேர்தல் அலுவலகத்தை இன்று முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனே துவங்கிவிட்டோம் எனக்கூறினார்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை, ஒவ்வொரு வீடு வாரியாக சென்று வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது, பல்வேறு சிறப்பு திட்டங்களை மக்களிடம் சேர்க்கச்செய்வது போன்ற பல பணிகளை செய்திருப்பதாக கூறினார். மீண்டும் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும் என்பது மக்களுடைய எண்ணம், அதில் மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள், என்றார்.
2026ல் கோவை தெற்கில் போட்டியிட திமுக தலைவர் வாய்ப்பு வழங்கி இருக்கிறார். கோவையில் கடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். இந்த தேர்தலில் கோவையில் மகத்தான வெற்றி பெற வேண்டும், அதற்கான ஒரு வாய்ப்பை எங்களுடைய கழகத் தலைவர் வழங்கி இருக்கிறார். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கோவை மாவட்டம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கான பணிகளை மிக வேகமாக முன்னெடுத்து மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம், என கூறினார்.
“உங்களை 50,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்று எதிர்க்கட்சியினர் (அம்மன் அர்ஜுன்) சொல்லி இருக்கிறார்கள், அதை எப்படி பார்க்கின்றீர்கள்?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பின்ன அவர்கள் தோற்றுப்போவோம் என்றா கூறுவார்கள்? அவர்கள் அவர்களுடைய கருத்துக்களை சொல்கிறார்கள்” என்று அதை கடந்து சென்றார்.
தமிழக முதலமைச்சர் கோவைக்கு வருகை தந்த போது கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பம்ப் செட் உற்பத்தியாளர்கள் தங்களுடைய தொழிலை பாதுகாக்கும் வகையில் ஏதேனும் சிறப்பு திட்டங்கள் வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்ததை நிறைவேற்றும் வகையில் நேற்று வெளிவந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்பை மேற்கோள் காட்டிய செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தினுடைய தொழில் நலனை பாதுகாக்கும் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார், திராவிட மாடல் ஆட்சி 2.0 விலும் கோவை மாவட்டம் வளர்ச்சி பெறும் என்று உறுதியாக கூறினார்.
கரூரில் இருந்து இப்போது கோவையில் போட்டியிடுவது பற்றி வானதி சீனிவாசன் போன்ற எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ள அரசியல் விமர்சனம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, “கோவை தெற்கில் இருந்தவர்கள் எதற்கு வடக்குக்கு சென்றார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
தான் எப்போதும் தேர்தல் களத்தை பார்த்து பயந்ததும் கிடையாது பின்னோக்கி சென்றதும் கிடையாது என்பதை பதிவு செய்த அவர், கரூரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தன்னை கோவையில் போட்டியிட தலைமை சொல்லி உள்ளது, கரூரும் கோவையும் தனக்கு வேறு வேறு கிடையாது என கூறினார்.
கழகத்தினுடைய வழிகாட்டுதல் படி கோவையில் அரசினுடைய பணிகளையும், இயக்கத்தினுடைய பணிகளையும் முன் நின்று செய்திருக்கின்றேன். அனைத்து பகுதிகளை நன்கு அறிவேன். கோவையை பொறுத்தவரை, என்னுடைய சொந்த ஊர் போல மக்கள் என்னை அன்போடு உபசரித்து உள்ளார்கள், கட்சியின் தலைவர்கள் அன்புடன் பார்த்துக்கொண்டுள்ளனர். இங்கு நிச்சயமாக வெற்றியை தர மக்கள் தயாராக உள்ளார்கள், என்றார்.
