சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் தொடங்கியது. கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து தவெக சார்பில் தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவில் வடசென்னை மாவட்டம் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில்: திமுக, அதிமுகவைத் தவிர்த்து இன்னொரு சக்தி இந்த மண்ணில் வரவேண்டும் என்று நினைக்கும் 35% வாக்காளர்கள் எல்லா பொதுத் தேர்தல்களிலும் வாக்களிப்பதற்கு வாக்கு சாவடிக்கே வரவில்லை. 65% வாக்கு பதிவை பதிவு செய்த தமிழ்நாடு, 2026 சட்டமன்ற தேர்தலில் 90% வாக்குகளை பதிவு செய்யும். காரணம் இந்த இடைவெளியை நிரப்ப தளபதி விஜய் வந்துள்ளார்.
திமுக, அதிமுகவுக்கு எதிராக இயக்கம் கண்டவர்கள் அனைவரும் முடங்கி விட்டனர்; அவர்களை முடக்கி விட்டனர். இன்று 26 கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் ஸ்டாலின் களத்தில் நிற்கிறார். விஜயின் வருகை, வளர்ச்சி, வரவேற்பும் ஸ்டாலினை 26 கட்சிகளை நாட வைத்துள்ளது.
இந்த யுத்தம் மிகப்பெரிய யுத்தம். இந்திய துணைக் கண்டத்தின் அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமான பொதுத் தேர்தல். நேற்று அரசியலுக்கு வந்தவன் என்று கிண்டல் செய்கிறார்கள். நித்தம் ஒரு வதந்தியை கிளப்புகிறார்கள். எங்கள் தலைவனை அழுக்காக முடியாது. அவர் ஒரு ஆகாயம், எரிமலை. இவ்வாறு அவர் பேசினார்.
